ஒலிம்பிக் வீராங்கனையையும் விடாத சாதி வெறி பாய்ச்சல்..!!
ஒலிம்பிக் வீராங்கனையையும் விடாத சாதி வெறி பாய்ச்சல்..!!
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அர்ஜென்டினா உடனான நேற்றைய போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி கடைசி 15 நிமிடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இந்திய பெண்கள் ஆக்கி அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது குறித்து இந்தியர்கள் அனைவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்திய ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு முன்பு சில நபர்கள் அவரது சாதியைச் சுட்டிக்காட்டி இந்திய அணியின் தோல்வியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், அரித்துவாரை அடுத்த ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஆக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 2 நபர்கள் சென்று உள்ளனர். வீட்டில் இந்திய அணியின் தோல்வியால் வந்தனாவின் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திலிருந்த நேரத்தில், 2 நபர்களும் வந்தனாவின் வீட்டின் முன்பாக பட்டாசுகளை வெடித்து, கிண்டல் செய்யும் விதமாக நடனமாடி இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடி உள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த வந்தனாவின் குடும்பத்தினரைச் சாதியைக் சுட்டிக்காட்டி அவதூறாகவும் பேசி உள்ளனர். தொடர்ந்து, அந்த இருவரும் வந்தனாவின் குடும்பத்தினரை நோக்கி, “இந்திய பெண்கள் ஆக்கி அணியில் ஏராளமான பட்டியலின வீராங்கனைகள் இருக்கின்றனர். அதனால் தான், இந்திய அணி போட்டியில் தோற்று விட்டது” என்று கத்தி கூச்சலிட்டுச் சிரித்திருக்கின்றனர். அதைக் கேட்டு மனமுடைந்து போன வந்தனாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த ரோஷனாபாத் போலீசார் வீராங்கனை வந்தனாவின் வீட்டிற்கு முன்பு சாதியைக் குறிப்பிட்டு அவதூறாகக் கோஷமிட்ட நபர்களில் ஒருவரை கைது செய்து உள்ளனர்.