முடிந்தது 70 ஆண்டு கால சகாப்தம்..பிரபல ப்ராண்ட் ‘Witco' செயல்பாடுகளை மூடுவதாக அறிவிப்பு!
முடிந்தது 70 ஆண்டு கால சகாப்தம்..பிரபல ப்ராண்ட் ‘Witco' செயல்பாடுகளை மூடுவதாக அறிவிப்பு!
1951 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுரடியில் தொடங்கியது ‘விட்கோ’-வின் பிசினஸ் பயணம். அதன்பின், ஒரு ப்ராண்டாக வளர்ந்து சென்னை, கொச்சின், பெங்களுரு என பல கிளைகளுடன், பிரீமியம் லக்கேஜ் மற்றும் பயணம் சார்ந்த உபகரணங்கள் பிரிவில் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றது.சென்னையின் லக்கேஜ் பிரிவில் சுமார் 60% சந்தையைக் கொண்டிருந்த ‘விட்கோ’ பலரின் அபிமான பயண ப்ராண்டாக இருந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய லக்கேஜ் மற்றும் சூட்கேஸ் நிறுவனமான விட்கோ தங்கள் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில்,
”நாங்கள் எங்கள் பிசினசை முற்றிலும் மூடுகிறோம் என்று சொல்வதில் வருத்தமடைகிறோம். கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட லாக்டவுனால் முடங்கிய வெளிநாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் எங்களால் இந்த தாக்கத்தை சமாளிக்க இயலாததால் எடுக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக எங்களின் ப்ராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” - விட்கோ குடும்பம்
கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்க ஆரம்பித்ததால், பல நாடுகள் கடும் ஊரடங்கை போட்டது. அதே போல், இந்தியாவும் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முழு ஊடங்கை தொடங்கியது. அதில், அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைத் தவிர மற்ற அனைத்து கடைகளும், மால்கள், சினிமா தியேட்டர்கள், சலூன்கள் என எல்லாவற்றும் செயல்படமுடியாது போனது. குறிப்பாக உலகமெங்கும் லாக்டவுன் அமலில் இருந்ததால், பயணம் சார்ந்த தொழில்கள் பெரும் முடக்கத்துக்கு ஆளாகின"
வெளிநாட்டு பயணங்கள், உள்ளூர் சுற்றுலாக்கள் அனைத்தும் தடைப்பட்டுப் போனதாலும், ஊரடங்கு தளர்வுகள் ஏற்பட்டு பயணங்கள் தொடங்கினாலும், மக்கள் தொற்றின் அச்சத்தால் சுற்றுலா பயணங்களை பெரிதும் தவிர்த்தனர். இதனால், டூர்ஸ்ட் இடங்கள், ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அதில் சில நிறுவனங்கள் மீண்டும் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.பயணம் என்றால் அதற்கு முக்கியத் தேவையான லக்கேஜ்கள் மற்றும் பெரிய அளவு பெட்டிகள், பைகளை ப்ரீமியம் வகையில் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான ‘விட்கோ’ இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது.விற்பனை இன்றி 2 வருடமாக கஷ்டப்பட்டது. போதிய பேக், லக்கேஜ் விற்பனை இல்லாமல் அந்த நிறுவனம் பெரிய இழப்பை சந்தித்தது.
இதனால் சென்னை தாண்டி பல இடங்களில் விட்கோ ஷோ ரூம் மூடப்பட்டு வந்தது. தற்போது பெரிய இழப்பு காரணமாக மொத்தமாக விட்கோ நிறுவனம் மூடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தை மூடுவதாக விட்கோ அறிவித்துள்ளது.