துரத்தும் கொரோனா.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு பாசிட்டிவ் !
துரத்தும் கொரோனா.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு பாசிட்டிவ் !
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள் பயோ பபுளில் இருந்தபோதும் கொரோனா வைரஸ் தொற்று அவர்களையும் விட்டுவைக்கவில்லை. கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ராவுக்கு பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.
சென்னை அணியுடன் பயோ பபுளில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, காசி விஸ்வநாதன் மற்றும் பேருந்து சேவை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அடுத்து நான்காவதாக மைக் ஹஸ்ஸி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மைக் ஹஸ்ஸி தனது சொந்த நாடானத ஆஸ்திரேலியா பறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
எனினும், நோய் தொற்று பாதிப்பிலிருந்து அவர் மீண்டதும் மாலத்தீவு வழியாக ஹஸ்ஸி அவரது தாய் நாட்டிற்கு திரும்புவார் என்றும் அதற்கான பணிகளை சென்னை அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் போட்டி நடத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
newstm.in