டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! - முழு அப்டேட்

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..! - முழு அப்டேட்

Update: 2021-06-17 13:20 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றடைந்தார். அவரை, திமுக எம்பி-க்கள், தமிழக அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர் டில்லி செல்ல முடிவெடுத்து பிரதமரிடம் நேரம் கேட்டிருந்த நிலையில், இன்று (17ம் தேதி) மாலை 5 மணிக்கு சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கியுள்ளார்.இதையடுத்து, இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின். அவருடன், அவரது மனைவி துர்கா, அமைச்சர் துரைமுருகன், உதவியாளர் தினேஷ், தனிச் செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், செல்வராஜ் உள்ளிட்டோரும் சென்றனர்.

முன்னதாக, முதல்வரை வரவேற்பதற்காக தமிழக மக்களவை, மாநிலங்களவை எம்பி-க்கள் டில்லி சென்றனர். டில்லி சென்று இறங்கிய முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.இதையடுத்து முதல்வர், டில்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப்பட்டு வரும் அறிவாலயம் கட்டடப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அவருக்கு, கட்டடம் உருவாகும் விதம், அதன் மாதிரிகளைக் காட்டி விளக்கப்பட்டது.

பின்னர், டில்லி வரும் தமிழக முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்குச் சென்றார். அங்கு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் திமுக எம்பி-க்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கார்டு ஆஃப் ஹானர் எனும் டில்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளித்தனர்.

தமிழக இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதல்வரை டில்லியின் முக்கிய பிரமுகர்கள் சந்திக்கின்றனர். மதிய உணவுக்குப் பின்னர், திமுகவின் மக்களவை, மாநிலங்களவை எம்பி-க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு பிரதமர் இல்லத்துக்குச் செல்கிறார்.

அவருடன் அமைச்சர் துரைமுருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, துணைத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் செல்வார்கள் எனத் தெரிகிறது. பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்குகிறார். அதற்கான கோரிக்கை மனுவையும் அளிக்கிறார். பின்னர் தமிழக இல்லம் திரும்புகிறார்.

மாலை 7 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கின்றனர். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவும் சந்திக்கிறார். அத்துடன், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்திக்கின்றனர்.

இரவு டில்லியில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரைச் சந்திக்கிறார். பின்னர் சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News