“முடக்க நினைக்கிறார் முதல்வர்..!” - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
“முடக்க நினைக்கிறார் முதல்வர்..!” - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது, தற்காலிக இடத்தில் இயங்கி வருகிறது.
எந்த இடத்தில் பல்கலைக்கழகம் இயங்குகிறதோ அங்குதான் அதிகாரம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பல்கலைக்கழகத்தை முடக்க சதி நடைபெறுகிறது.
திருவள்ளுவர் பல்கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில்,‘மாணவர்கள் உயர்கல்வி படிக்க திருவள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் என்ன..?
மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகம், அம்மா கிளினிக் அடித்து நொறுக்கப்பட்டபோது, ‘கடந்த ஆட்சியின் திட்டங்கள் அப்படியே இருக்கும்’ என முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது அம்மா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கிறார்.
மேலும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு வாகனம் கூட கொடுக்கப்படவில்லை. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் சேர அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.