தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீதான புகார்.. நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரணையால் பரபரப்பு!
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீதான புகார்.. நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரணையால் பரபரப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 என்கிற படத்தை அவரே இயக்கி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு பண உதவி செய்தவர் பிரபல் திரைப்பட தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி. நடிகர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவாவின் தந்தையான இவர் படங்களை தயாரிப்பது மட்டுமில்லாமல், திரைப்பட உருவாக்கப் பணிகளுக்கு கடன் தருவது மற்றும் படங்களை விநியோகம் செய்வது உள்ளிட்ட தொழில்களையும் ஆர். பி. சவுத்ரி செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரிடம் இருந்து நடிகர் விஷால் குறிப்பிட்ட தொகையை கடன் பெற்றுள்ளார். அப்போது அவரிடம் செக் உள்ளிட்ட சில ஆவணங்களில் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. கடன்பெற்ற பணத்தை முழுமையாக கொடுத்த பின் அந்த ஆவணங்களை தந்துவிட வேண்டும் என்பது நிபந்தனை. கடந்த பிப்ரவரி மாதம் ஆர். பி. சவுத்ரியிடம் இருந்து வாங்கப்பட்ட பணத்தை வட்டியுடன் நடிகர் விஷால் செட்டில் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து பணம் வாங்கும் போது கையொப்பமிட்டு வாங்கப்பட்ட ஆவணங்களை விஷால் அலுவலகம் திருப்பிக் கேட்டுள்ளது.
அப்போது செக் உள்ளிட்ட விஷால் கையெழுத்திட்ட ஆவணங்கள் அனைத்தும் தொலைந்துவிட்டதாக ஆர்.பி. சவுத்ரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் விஷால் உடனடியாக இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விஷாலின் உதவியாளர் ஹரி, விசாரணைக்காக ஆஜரானார். அவர் புகார் தொடர்பான ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தொலைபேசி மூலமாக நடிகர் விஷாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். எப்போது கடன் வாங்கினீர்கள், என்னென்ன ஆவணங்கள் கொடுத்தீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விஷாலிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
newstm.in