பெயரளவுக்கு நடத்துங்கள்.. கும்பமேளாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய பிரதமர் மோடி !
பெயரளவுக்கு நடத்துங்கள்.. கும்பமேளாவில் கொரோனா பரவல் குறித்து பேசிய பிரதமர் மோடி !
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு கடந்த 1ஆம் தேதி கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால், நாட்டில் கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். பெரும்பாலானோர் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமலும், முக்ககவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைபிடிக்காமலும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கூடியதோடு நீராடினர்.
அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 2,171 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனா பாதித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவை விட்டு சாதுக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பமேளா குறித்து பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் கொரோனா பரவி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி கும்பமேளாவை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஏப்பல் 30 ஆம் தேதிவரை கும்பமேளா திட்டமிட்ட நிலையில் பிரதமர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். ஜூனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.
newstm.in