பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்டில் விசேஷம்- குவியும் வாழ்த்துகள்..!
பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்டில் விசேஷம்- குவியும் வாழ்த்துகள்..!
இந்தியளவில் கொண்டாடப்படும் பாடகி ஸ்ரேயா கோஷல் சமூகவலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் மட்டுமே பாடிவந்த ஸ்ரேயா கோஷலை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இளையராஜா. பாலுமகேந்திரா இயக்கத்தில் ஜெயராம், சரிதா, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘ஜூலி கணபதி’ படத்தில் முதன்முறையாக பாடினார் ஸ்ரேயா. ‘எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே’ என்கிற அந்த பாடல் இன்றும் தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் பாடியிருந்தாலும், ஸ்ரேயாவுக்கு தனி அடையாளமாக அமைந்தது ‘முன்பே வா என் அன்பே வா’. வட இந்தியர்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அளவுக்கு இந்த பாடல் தேசியளவில் ஹிட்டாகி, காதலர்களின் தேசிய கீதமாக மாறியது. அதை தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் ஸ்ரேயா கோஷல் கொடி உயர பறக்க தொடங்கியது.
அவர் பணியாற்றாத இசையமைப்பாளர்களே கிடையாது என்னும் அளவுக்கு, அவருடைய படைப்புகள் ஒவ்வொருவரையும் கவர்ந்தது. சாதாரண பாடல்கள் கூட அவர் பாடிய பிறகு தனி அடையாளம் பெற்றன. தமிழில் டி. இமான், ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், ஹாரீஸ் ஜெயராஜ் போன்றோருடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு வங்காளத்தை சேர்ந்த ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பாடகி ஸ்ரேயா தன கர்ப்பமாக இருப்பதாக கூறி அழகிய புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மேலும் ஸ்ரேயாவின் கணவருடைய சமூகவலைதள கணக்கையும் டேக் செய்து ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.