கூண்டோடு ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் ! மூத்த தலைவர்கள் அதிர்ச்சி !!
கூண்டோடு ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகிகள் ! மூத்த தலைவர்கள் அதிர்ச்சி !!
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு அணிகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம், கடந்த பல நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இதனிடையே கடந்த 25-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்த நமச்சிவாயம் தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் வழங்கினார். அத்துடன், ஊசுடு சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தீபாய்ந்தான், தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும், சபாநாயகர் சிவகொழுந்துவிடம் வழங்கினார்.
புதுச்சேரி அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், முதல்வர் நாராயணசாமியை கண்டித்தும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, நமச்சிவாயமும், தீபாய்ந்தானும் தெரிவித்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், டெல்லியில் பாஜகவில் இணைந்தார்.
நமச்சிவாயம் மற்றும் தீபாய்ந்தான் ஆகிய இரண்டு பேரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், புதுச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், எனவே, முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்றும் புதுச்சேரி அதிமுக வலியுறுத்தி வருதால், முதல்வர் நாராயணாசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன், சிறப்பு அழைப்பாளர் ராஜன், இந்திரா நகர் தொகுதி வட்டார தலைவர் ரமேஷ், சமூக வலைதள தலைவர் சரவணன், இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராபர்ட் கிளைவ், மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் குணசுந்தரி, காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர் அய்யனார் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும், முத்தியால்பேட்டை, நெல்லித் தோப்பு, மங்கலம், நெட்டப்பாக்கம், ஊசுடு, முதலியார்பேட்டை, தொகுதியைச் சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தங்கள் பதவியை தூக்கி எறிந்தனர். அவர்கள் அனைவரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.