சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து.. யூடியூபர் மாரிதாஸுக்கு டிச. 23 வரை சிறை..!

சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து.. யூடியூபர் மாரிதாஸுக்கு டிச. 23 வரை சிறை..!

Update: 2021-12-10 12:24 GMT

மதுரை புதூர் சூர்யா நகரை அடுத்த குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிதாஸ். இவர், சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் மாரிதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக ஆட்சி குறித்தும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்ததாக டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணியன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்க புதூர் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாரிதாஸின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு கூட்டிவந்தனர். பின்னர், மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைத்தல் தொடர்பான 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பின்னர் கைது செய்தனர்.

இதையடுத்து, மாரிதாஸை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கு முன்னர் அவருக்கு கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய, அவரை காவல்துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது புதூர் காவல் நிலையம் முன்பாக காவல்துறையினர் வாகனத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் கூட்டிச் சென்றனர். பின்னர் மாரிதாஸ் மதுரை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அங்கு இது தொடர்பாக விசாரித்த நீதிபதி சுந்தர காமேஸ்வர மார்த்தாண்டம், யூடியூபர் மாரிதாஸை வருகிற 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உத்தரவிட்டார் . இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாரிதாஸ் காவல்துறை வாகனத்தில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளை சிறைக்கு கூட்டிச் செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News