குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

Update: 2021-12-08 18:05 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.

இந்த விமானத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்த தகவல் வெளியானதும் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். விபத்து நடந்து இடத்திற்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் சில மணி நேரங்களில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசமான வானிலையையும் புறக்கணித்துவிட்டு மிக சாமர்த்தியமாக பறக்கக்கூடிய எம்ஐ17 வி5 ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்று அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்குத் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சென்றுள்ளார்.

மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், இன்று மாலை அவர் கோவை செல்கிறார். அங்கிருந்து, விபத்து நடத்த இடத்திற்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar News