கொரோனா 3ஆவது அலையை தடுக்க முடியும்.. நிதி ஆயோக் கூறும் வழிமுறைகள் !!
கொரோனா 3ஆவது அலையை தடுக்க முடியும்.. நிதி ஆயோக் கூறும் வழிமுறைகள் !!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாக மேற்கொள்ளப்படுவதால், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதில் புதிய உச்சமாக நேற்று (ஜூன் 21) அன்று ஒரேநாளில் மட்டும் 85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில்கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையை தடுக்க முடியும் என இந்திய மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால், மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட்டால் தொற்றுநோயின் மூன்றாவது அலையை தடுக்கலாம். இதனை உணர்ந்து தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தியுள்ளோம். கொரோனா தடுப்பு முறைகளை முறையாக கடைபிடித்தால், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஏன் மூன்றாவது அலை ஏற்படுகிறது. இரண்டாவது அலை கூட வராத பல நாடுகள் உள்ளன என அவர் கூறினார்.
வரவிருக்கும் நாட்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி வேகத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளத்தை மேலும் பெறும் வகையில் பல தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் அன்றாட வேலைகளைச் செய்ய வேண்டும், நமது சமூக வாழ்க்கையை பராமரிக்க வேண்டும், பள்ளிகள் திறப்பு, வணிகங்கள், நமது பொருளாதாரத்தை கவனித்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விரைவான வேகத்தில் தடுப்பூசி போட முடிந்தால்தான் இதையெல்லாம் செய்ய முடியும் எனவும் டாக்டர் பால் கூறினார்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆவது அலை குறைந்துவிட்டதால், இதுவே கொரோனா தடுப்பூசியை மக்கள் போட்டுக்கொள்ள உகந்த நேரம். எனவே வதந்திகளை நம்பாமல் மக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
newstm.in