இந்தியாவில் மீண்டும் குறையும் கொரோனா ! குறையாத உயிரிழப்பு விகிதம் !
இந்தியாவில் மீண்டும் குறையும் கொரோனா ! குறையாத உயிரிழப்பு விகிதம் !
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை நேற்று மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்து இன்று குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 542 பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 40,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒப்பிடும் போது உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 3.95 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3.82 கோடி, குஜராத்தில் 2.87 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 4,30,422 பேர் நோய் தொற்றால் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது சிகிச்சையில் இருப்போர் விகிதம் 1.39ஆக உள்ளது. அதில் அதிகமாக கேரளாவில் 1,15,662 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 1,10,505 பேரும், கர்நாடகாவில் 32,406 பேரும், தமிழ்நாட்டில் 29,950 பேரும், ஆந்திராவில் 25,526 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் அதிக இறப்பு பதிவாகியுள்ளது. அங்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 3,01,83,876 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 97.28 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 7,391 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனால் அதிகபட்சமாக கேரளாவில் 12,370 பேர், தமிழ்நாட்டில் 3,006 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 4,12,531 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.32ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 39,53,43,767 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,78,078 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 44.1 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,910 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
newstm.in