கொரோனா தேவி கோவில்.. பிரதிஷ்டை முடிந்த 5ஆவது நாளில் கோவில் இடித்து தரைமட்டம்!
கொரோனா தேவி கோவில்.. பிரதிஷ்டை முடிந்த 5ஆவது நாளில் கோவில் இடித்து தரைமட்டம்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக மக்கள் பெரும் சிக்கலில் சிக்கி தவித்து வருகின்றனர். பலர் உயிரிழந்தும், வேலை இழந்தும், வருமானம் இன்றியும் அவதியடைந்து வருகின்றனர். ஒட்டுமொத்தத்தில் மனித சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால், வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்படி அவரவர் தங்கள் இஷ்ட தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.
அதேபோன்று, பல்வேறு இடங்களில் கோரோனா தேவி சிலையை நிறுவி வழிபடத் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் கோவையில் கோவில் அமைக்கப்பட்டது. இதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. மனிதனை கொல்லும் கொரோனாவுக்கு கோவிலா எனவும் விமர்சித்தனர். இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம், சுக்லபூர் கிராமத்தில் கொரோனா தேவி கோவில் கட்டினர். வேப்ப மரத்தடியில் கொரோனா தேவிக்கு சிலை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கினர். கடந்த 7ஆம் தேதி முதல் கோவில் திறக்கப்பட்டது.
ஆனால், திறக்கப்பட்ட 5வது நாளில் அதாவது 11ஆம் தேதி இரவில் அக்கோவில் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலை போலீசார் இடித்துவிட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தாலும் அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பிரச்சனைக்குரிய நிலத்தில், கோவில் கட்டியதால் எதிர்தரப்பினர் கோவிலை இடித்ததாக தெரிவித்தனர்.
இந்த கொரோனா தேவி கோவிலை நொய்டாவைச் சேர்ந்த லோகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா என்பவர் உள்ளூர் மக்களிடம் நன்கொடை பெற்று கட்டி உள்ளார். கிராமத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் வர்மா என்பவரை பூசாரியாக நியமித்துள்ளார். அதன்பின்னர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் கோவில் இருந்த இடத்திற்கு வேறும் சிலருக்கு பங்கு உள்ளதால் கோவிலால் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் அக்கோவில் இடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in