கொரோனா: உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள்.. உறவினர்கள் ஆத்திரம்
கொரோனா: உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள்.. உறவினர்கள் ஆத்திரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக நாக்பூர் நகர் விளங்குகிறது. அங்கு ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.நாக்பூரில் மட்டும் கொரோனா சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 51,576 ஆக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் 63 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் உறவினர்கள் அருகில் இருந்து கண்காணிக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் உறவினர்கள் தங்கள் வீடுகளில் இருந்துள்ளனர். இந்த நிலையில், சிகிச்சை பெறும் அப்பெண்ணின் உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் அளித்துள்ளனர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கினர். மேலும் மருத்துவமனை நிர்வாகத்தினர் இறந்து போனதாக கூறப்பட்ட பெண்மணிக்கு இறப்பு சான்றிதழும் தந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பெண்ணின் வீட்டில் இறுதி சடங்குகளுக்கு உறவினர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். உறவினர்களும் அவர்களின் வீடுகளில் திரண்டனர். இப்படியாபட்ட நேரத்தில் திடீரென மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டு தாங்கள் தவறுதலாக தகவல் அளித்துவிட்டதாகவும் உங்கள் உறவினர் உயிருடன் தான் உள்ளார் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பதறியடித்து உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சென்று நேரில் கேட்டப்போது அப்பெண் உயிருடன் தான் உள்ளார் என்பது உறுதியானது. இதனையடத்து உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்துவிட்டார் என பொறுப்பில்லாமல் தகவல் அளித்த மருத்துவமனை நிர்வாகத்தினரை கண்டித்து மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கிருந்து தங்கள் உறவினரான பெண்மணியை டிஸ்சார்ஜ் செய்து மற்றொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in