தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் 7 பேருக்கு கொரோனா.. நடவடிக்கைகள் தீவிரம் !
தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகள் 7 பேருக்கு கொரோனா.. நடவடிக்கைகள் தீவிரம் !
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் சூழற்சி முறையில் வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். எனினும் சில இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
மேலும் பள்ளியில் பயிலும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகள் 600 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளனர். இதன் முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று முதல் 20, 21, 22 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளி, விடுதிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொரோனா பாதித்த 7 மாணவர்களில் 4 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்துவந்தனர். மாணவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருச்சி சீராத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கும் சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர். திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
newstm.in