தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தனக்கென ஒரு ரசிகர் படையை வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்
செம்மரக்கடத்தலை மையப்படுத்தி புஷ்பா தயாராவதாக சொல்லப்படுகிறது. கடத்தல்காரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். சமீபத்தில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திர பெயர் - அறிமுகம் என்று ஒரு டீஸரை வெளியிட்டனர். பாகுபலி உள்ளிட்ட அனைத்துப் படங்களின் டீஸர் சாதனையை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பற்றி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.“எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.