மீண்டும் தீவிரமடையும் கொரோனா: 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்கள் பாதிப்பு..!
மீண்டும் தீவிரமடையும் கொரோனா: 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்கள் பாதிப்பு..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் 10 பேர் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழே குறைந்திருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 8,067 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுமட்டுமின்றி, ஒமைக்ரான் பாதிப்பிலும் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஏற்கனவே கொரோனா முதல் அலை மற்றும் 2வது அலையின்போதும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருந்தனர். இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது அங்கு வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.