இந்தியாவில் பரவும் கொரோனா.. பள்ளிகள் மூடல்.. நிறுவனங்கள் வேண்டுகோள்.. பல நாடுகளுக்கான விசா தடை..!

இந்தியாவில் பரவும் கொரோனா.. பள்ளிகள் மூடல்.. நிறுவனங்கள் வேண்டுகோள்.. பல நாடுகளுக்கான விசா தடை..!

Update: 2020-03-04 14:28 GMT

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 912 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கின்றனர். இந்தியாவில் தெலுங்கனா மற்றும் டெல்லியில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தனி கவனம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்தவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் குறித்து பீதி அடையத் தேவையில்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. பாதிப்பு ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்கலாம் என்றவர் அத்துடன் கைகளை அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும், கண்கள், மூக்கு மற்றும் வாயினை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்களையும் அவர் இணைத்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் துறை மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகத்தில் பேரில் 284 பேரை கர்நாடகாவில் வீட்டில் தனிமையில் வைத்து கவனித்து வருவதாக, அத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தை ஒட்டி உள்ள கர்நாடக பகுதிகளான தக்ஷ்ண கன்னடா, குடகு, உடுப்பி, மைசூரு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கேரளாவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து கண்காணித்தும் வருகிறோம் என கூறியுள்ளார்.  

நொய்டாவில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் அடுத்த சில நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கொரோனா வைரஸால், இப்பள்ளியின் மாணவரின் தந்தை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
இந்நிலையில், வெளிநாட்டுப் பயணம் தொடர்பான புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்காக பெற்ற அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கட்டாயம் வர வேண்டும் என விரும்புகின்றவர்கள், அருகேயுள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தூதர்கள் மற்றும் விமானச் சேவை பணியாளர்கள் ஆகியோருக்கு இந்தப் புதிய கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்திலே சீனா, தென் கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி, ஹாங்காங், மக்காவ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருவோருக்கு கட்டாய மருத்துவச் சோதனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், சுமார் 26 மருந்து பொருட்கள் (ஏபிஐ) மற்றும் ஆன்டி பயோட்டிக், வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள் உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏபிஐக்கள் மற்றும் பாராசிட்டமால், டினிடாசோல், மெட்ரோனிடாக்சோல், வைட்டமின்கள் பி 1, பி 6, பி 12, ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன், குரோமாபெனிகால், ஆர்னிடசோல் போன்றவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

newstm.in

Tags:    

Similar News