விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி.. உலகின் முதல் நாடாக உருவாக்கியது ரஷியா !!

விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி.. உலகின் முதல் நாடாக உருவாக்கியது ரஷியா !!

Update: 2021-04-01 09:45 GMT

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக அதன் வீரியம் குறையாமல் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

இதனிடையே கொரோனா வைரஸ் மனிதர்கள் மட்டும் இன்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் மனிதர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷியாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.  

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனை முடிவுகள் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்பதை உறுதி செய்ததோடு அது விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதையும் வெளிப்படுத்துவதாக தடுப்பூசி ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருந்து நிறுவனங்கள் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன. எனவே இந்த மாதம் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Tags:    

Similar News