நான் இதை குடிப்பதால் எனக்கு கொரோனாவே வராது !!
நான் இதை குடிப்பதால் எனக்கு கொரோனாவே வராது !!
பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியானார் பிரபல பெண் சாமியார் பிரக்யா தாக்கூர். அப்போது முதல் இவர் கூறும் பல்வேறு கருத்துகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவும் பலத்த எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
மத்திய பிரதேசம் போபால் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் கடுமையான வலியிலிருந்தபோது தினமும் பசு கோமியத்தை குடிக்கத் தொடங்கினேன். அதனால் தற்போது நான் எந்த மருந்தையும் கொரோனாவுக்காக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
பசு கோமியத்தால் நுரையீரல் பாதிப்பை தடுக்க முடியும். எனக்கு உடலில் கடுமையான வலி இருந்த போது நான் தினமும் பசு கோமியத்தை குடித்து வந்தேன். இதனால் தற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு கொரோனா நோய் தொற்றும் இல்லை. பசு கோமியம் உயிர் காக்கும் மருந்தாகும் என அவர் கூறியுள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து பசு கோமியம் பாதுகாக்கும் என்ற கருத்தை மருத்துவர்கள் தொடர்ந்து மறுத்துவருகிறார்கள். மேலும் இது மற்றவர்களுக்கு தவறான கருத்தாக பரவிவிடும் என்று பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பசு கோமியம் கொரோனா நோய் தொற்றையோ அல்லது மற்ற நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரக்யா அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in