கட்டுப்பாட்டை மீறும் கொரோனா; தேர்வை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு..!

கட்டுப்பாட்டை மீறும் கொரோனா; தேர்வை நிறுத்தி வைக்க கோர்ட் உத்தரவு..!

Update: 2021-09-03 19:00 GMT

கேரளாவில், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்றை ஆய்வு செய்த மத்திய சுகாதார குழுவினர், தேவையான இடங்களில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தலாம் எனப் பரிந்துரைத்தனர்.

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடக மாநில அரசுகளும் விழிப்படைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கர்நாடக மாநிலத்துக்கு வரும் கேரள மக்கள் 72 மணி நேரத்துக்கு முன் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்தச் சூழலில் வரும் 6ம் தேதி மாநிலம் முழுவதும் 11ம் வகுப்பு தேர்வு தொடங்க இருக்கிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதாமல், நேரடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

கேரளாவில் கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்தச் சூழலில் மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதினால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும். ஆதலால் தேர்வை நிறுத்தி வைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஏ.எம்.கான்வில்கர், சிடி ரவி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில், “கேரளாவில் கொரோனா பரவல் ஆபத்தான சூழலில் இருக்கிறது. நாட்டின் 70 சதவீத பரவல் கேரளாவில்தான் இருக்கிறது. நாள்தோறும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அது ஆபத்தாக முடியும்.

கேரளாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இருந்தபோதிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வரும் 6ம் தேதி நடக்கும் 11ம் வகுப்பு தேர்வை ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்க அரசுக்கு உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர்.

Tags:    

Similar News