சிக்சர் விளாசி வெற்றிபெற வைத்த தோனி - பிளே ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்த முதல் அணி சிஎஸ்கே !!
சிக்சர் விளாசி வெற்றிபெற வைத்த தோனி - பிளே ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்த முதல் அணி சிஎஸ்கே !!
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 44ஆவது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கும்போல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சாகா 46 பந்தில் 44 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் வழக்கம்போல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்தது.
ருதுராஜ் 38 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் கேப்டன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார். அப்போது சென்னை அணிக்கு 25 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். 4ஆவது பந்தை டோனி சிக்சருக்கு விளாச சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி அடித்த சிக்சர் மைதானத்தின் கூரை மீது விழுந்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது, அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. புள்ளிப்பட்டியலில் 9 வெற்றிகளுடன் முதலிடத்தில் தொடரும் சிஎஸ்கே 1.002 என்ற ரன் ரேட்டையும் வைத்துள்ளது. ரன் ரேட் சில நேரங்களில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யவும் பயன்படும்.
newstm.in