இயற்கை உபாதைக்காகச் சென்ற தலித் இளைஞர் அடித்து கொலை.. விழுப்புரத்தில் கொடூரம்..!!
இயற்கை உபாதைக்காகச் சென்ற தலித் இளைஞர் அடித்து கொலை.. விழுப்புரத்தில் கொடூரம்..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் விழுப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே இயற்கை உபாதைகளைக் கழிக்க சென்றுள்ளார். சிறிதுநேரத்தில், அந்த இளைஞரின் தங்கை தெய்வானைக்கு போன் வருகிறது. சக்திவேலை நாங்கள் பிடித்துவைத்துள்ளதாகவும், புத்தூர் பகுதிக்கு உடனடியாக வருமாறு அதில் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு தெய்வானை விரைந்தார். அங்கு சக்திவேலின் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. அவரை சுற்றி 20க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர்.
அவர்கள் போலீசிற்கு தகவல் தரவே, 2 மணிநேரம் கழித்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாகிவிட்டனர். உறவினர்கள் துணையுடன், தெய்வானை சக்திவேலை வீட்டிற்கு அழைத்து வந்து பணத்தை எடுத்துக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தாங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே, தனது சகோதரன் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திவரும் நிலையில், மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர். விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் கூறியதாவது, சாதி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா என்பது முழுமையான விசாரணைக்குப்பிறகே சொல்ல முடியும். கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
newstm.in