மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும்,  சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பிற்பகல் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இந்த பயங்கர மோதலில், அந்த பகுதியில் இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், துப்பாக்கிச் சூட்டில் போலீசார் ஒருவர் பலி. சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் உடனடியாக டெல்லி விரைகிறார் பிரதமர் மோடி. 

 

டெல்லி வன்முறை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அளித்துள்ள தகவலையடுத்து பிரதமர் டெல்லி விரைகிறார். டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல்துறை. டெல்லி மஜ்பூரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழப்பு.

டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல மாநிலங்களில் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்று வந்தாலும், டெல்லி மாணவர்கள், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய போது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையும் மீறி டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே இன்று டெல்லி ஜாபராபாத் பகுதியில் போராட்டம் நடைப்பெற்ற போது, சி.ஏ.ஏ. ஆதரவாளர்களும் அந்த பகுதியில் குவிந்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில், அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. மேலும் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

newstm.in

Tags: