டெல்டா பிளஸ் பரவல்.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் எச்சரிக்கை !!

டெல்டா பிளஸ் பரவல்.. தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் எச்சரிக்கை !!

Update: 2021-06-26 07:15 GMT

இந்தியாவில் புதிதாகப் பரவிவரும் டெல்டா பிளஸ் எனப்படும் AY.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

தமிழகத்தில் ஒன்பது பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழக தலைமை செயலாளருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: டெல்டா பிளஸ் வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. 

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னை காஞ்சிபுரம், மதுரை பகுதிகளில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் மேலும் பல தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அறிவிப்பு வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களில் மத்திய அரசு டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் கேரள மாநில தலைமைச் செயலர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் AY.1 வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு உள்ளது.


newstm.in

Tags:    

Similar News