காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை !!

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை !!

Update: 2021-12-07 19:13 GMT

காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள தெற்கிருப்பைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்ததால் அவ்வப்போது வெளிஇடங்களுக்கு சென்று சுற்றிவந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி இருவரும் தனியாக சந்தித்த போது, திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண்ணை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமான நிலையில் திருமணம் செய்யும் படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் மணிகண்டன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பெண் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறி அங்குள்ள கோயிலில் மாலை மாற்றி நிச்சயம் செய்துக் கொண்டனர். அக்டோபர் மாதம் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்த  நிலையில் 6 மாதம் கழித்து திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தட்டிக்கழித்துள்ளார். 

அதன்பின்னர், மணிகண்டன் திருப்பூர் சென்று விட்டதாகவும் அவர் வந்த பின்னர் திருமணம் நடத்திக் கொள்ளலாம் என்று மணிகண்டன் பெற்றோர் கூறி வந்த நிலையில் அவர் அங்கே ஒரு பெண்ணுடன் பழகி திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார்.  இத்தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் மீண்டும் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். 

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் இன்று தீர்ப்பு கூறினார். அதில், பெண்ணை திருமண ஆசைக்காட்டி கர்ப்பமாக்கியதோடு, குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த மணிகண்டனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1.50 லட்சத்தில், ரூ.1.40 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Similar News