சாய் பல்லவி நடித்த பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..!
சாய் பல்லவி நடித்த பாடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..!
நாட்டுப்புறப் பாடலை தழுவி ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா..’ பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் நாக சைத்தன்யா மற்றும் சாய்பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் ஸ்டோரி’ படம் தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ பாடல் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது வரை இந்த பாடலை 4 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் பிரபல நாட்டுப்புறப் பாடகி கோமலி ‘சாரங்க தரியா’ பாடல் தன்னுடையது என்றும், தன்னிடம் அனுமதி பெறாமல் அந்த பாடல் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் பயன்படுத்துள்ளதாக கூறி சர்ச்சையை எழுப்பினார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா ஊடகங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிய இந்த பாடல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சேகர் கம்முலா தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், நாட்டுப்புறப் பாடகி கோமலிக்கு குறிப்பிட்ட பணம் வழங்கப்படும் என்றும், லவ் ஸ்டோரி பட இசை வெளியீட்டு விழாவில் ‘சாரங்க தரியா’ பாடலை மேடையில் அவர் பாடுவார் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாடகி கோமலி, சேகர் கம்முலாவுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். சாரங்க தரியா பாடல் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, ‘லவ் ஸ்டோரி’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ஆந்திர ரசிகர்கள்.