போதையில் தகராறு! போலீசாரை அடித்து உதைத்த பொதுமக்கள்!
போதையில் தகராறு.. காவலரை சரமாரியாக அடித்து உதைத்த கிராம மக்கள்..!
திண்டுக்கல் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட காவலருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் பாண்டியராஜன். இவர் திண்டுக்கல் - வேடசந்தூர் நான்கு வழிச்சாலை பகுதியில் பைக்கில் செல்லும் போது சாலையோரம் நடந்து சென்ற ஒருவர் மீது மோதி உள்ளார்.
இதனால் காவலருக்கும் நடந்து சென்றவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த காவலர் பாண்டியராஜன் அநாகரிகமாக வார்த்தைகளால் அனைவரையும் திட்ட பொதுமக்கள் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர்.
மேலும், அவ்வழியே வந்து கொண்டிருந்த கூம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் கோவிந்தராஜ் என்ற காவலர் அங்கு நின்று பொதுமக்களிடமிருந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ரகளையில் ஈடுபட்ட காவலர் பாண்டியராஜனை மீட்டு அழைத்துச் சென்றார். மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட போலீசாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுக்கும் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
newstm.in