மோடியை வரவேற்பதிலே தெரியும் திமுகவின் நிலைப்பாடு.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மோடியை வரவேற்பதிலே தெரியும் திமுகவின் நிலைப்பாடு.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Update: 2022-01-01 16:42 GMT

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டியும், ஒமைக்ரான் தொற்று நீங்க வேண்டியும், கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என மீனாட்சியம்மனை குடும்பத்தோடு தரிசனம் செய்துள்ளோம்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அதிமுக அரசு செய்தது போல திமுக அரசும் செயல்பட வேண்டும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார். அவரோடு சேர்ந்து அனைவரும் பணியாற்றி கொரோனா பரவலைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மக்களுக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை திமுக அரசு செயல்படுத்தும் என்று நம்புகிறேன். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால், தமிழகத்தில் மற்றொரு ஊரடங்கு வருமோ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

புத்தாண்டு நாள் என்பதால் நகைக்கடன் குறித்து இன்று எதுவும் பேச வேண்டாம். மதுரை மாநகராட்சி கிராமம் போல உள்ளது. வீதியெங்கும் சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. அதிமுக சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் ஜனவரி 4-ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

மதுரை மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும். அந்த நிதியை முதலமைச்சர் நிச்சயம் அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த நிலையில் இருந்தாலும், அதிமுக மக்களின் நலனுக்காக போராடும்.

வரலாற்றில் இதுவரை எந்த ஒரு இந்திய பிரதமரும் பேசாத வகையில் தமிழ் கலாச்சாரத்தையும், பெருமையையும் பற்றி பேசி வருபவர் மோடி. உலகெங்கும் தமிழர்களின் கலாச்சார பெருமையை பறைசாற்றி வருகிறார். திருக்குறள், புறநானூறு ஆகியவற்றை ஐ.நா. வரை எடுத்துச் சென்று பேசி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி மதுரை வருகை என்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது. மதுரை வரும் பிரதமரை தமிழக மக்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டும். மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மோடியை எதிர்த்துவிட்டு, தற்போது வரவேற்பு அளிப்பதில் இருந்தே மக்களுக்கே தெரியும் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று” எனக் கூறினார்.

Similar News