குடியரசு தின விழாவைக் காண வரவேண்டாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
குடியரசு தின விழாவைக் காண வரவேண்டாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
நாடு முழுவதும் நாளை (26-ம் தேதி) 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தமிழக ஆளுநர் ஜனவரி திங்கள் 26-ம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி மற்றும் ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டும், கேட்டும் மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.