உடனே உங்க அக்கௌன்ட் கிளோஸ் பண்ணுங்க... மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..!
உடனே உங்க அக்கௌன்ட் கிளோஸ் பண்ணுங்க... மாணவர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..!
‘மாணவ - மாணவியர் சமூக வலைதள பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அத்துடன், சமூக வலைதளங்களில் தங்கள் படங்களை பதிவிடக் கூடாது’ என, திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக, பள்ளி மாணவ - மாணவியர் இடையே 'ஸ்மார்ட்போன்' பயன்பாடு அதிகரித்துள்ளது. வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் தன்னையே அறியாத அளவுக்கு இணையதளத்தில் மூழ்கி விடுகின்றனர். சிலர், கல்வி மற்றும் அறிவு சார்ந்த தேடல்கள் தவிர்த்து, தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
இத்தகைய செயல்களுக்கு கடிவாளம் போடும் வகையில், திருப்பூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ‘18 வயதுக்கு உட்பட்ட மாணவியர் எவருமே சமூக வலைதள பக்கங்களில் புதிதாக கணக்கு தொடங்கக் கூடாது. ஏற்கனவே தொடங்கி இருந்தால், அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும்' என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவ - மாணவியர் சமூக வலைதள பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் தங்கள் படங்களை பதிவிடக் கூடாது. சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது' என்றனர்.