ஒமைக்ரானுடன் கொரோனா முடிகிறதா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !
ஒமைக்ரானுடன் கொரோனா முடிகிறதா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !
ஒமைக்ரான் திரிபுடன் கொரோனா பரவல் ஓய்ந்துவிடும் என்று கணிப்பது மிகுந்த ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா ஒருபக்கம் தீவிரமாக பரவி வரும் அதேநேரத்தில், அதன் திரிபான ஒமைக்ரான் உலக நாடுகளில் பரவியுள்ளது. மிகவேகமாக பரவும் தன்மைக்கொண்டது என்பதால் குறுகிய நாட்களில் மிகத்தீவிரமாக பரவி மக்களை பாதிக்கச்செய்து வருகிறது ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று.
ஆனால், ஒமைக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் இத்துடன் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்துவிடும் எனவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதேனோம் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று நோயானது, தனது மூன்றாவது ஆண்டுக்குள் நுழைகிறது. இது நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தருணமாகும்.
இதுபோன்ற நேரத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர உழைக்க வேண்டும். இனியும் கொரோனா தொடர்கதையாக நாம் அனுமதிக்க கூடாது.
கொரோனாவை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் நம்மிடையே உள்ளன. அதனால் அலட்சியம் வேண்டாம். வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் ஒமைக்ரான் திரிபு கொரோனாதான் அனைத்திலும் கடைசி கொரோனா திரிபாக இருக்குமென நினைக்கவேண்டாம். அப்படி நினைத்தால், அதுவே ஆபத்துக்கு வழிவகுக்கும். ஆகவே இந்த கொரோனா பெருந்தொற்றின் இறுதி ஆட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோமென நினைப்பது தவறு.
கடந்த 9 வாரங்களுக்கு முன்னர்தான் ஒமைக்ரான் திரிபு உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்த குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 80 மில்லியன் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 மில்லியன் என்பது, 2020-ம் ஆண்டு பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது, என குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை, கொரோனா பரிசோதனையை துரிதப்படுத்துவது மற்றும் தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிப்பது போன்றவற்றை அனைத்து நாடுகளும் சரியாக முயன்றால், நம்மால் இந்த இக்கட்டான நிலையை கடக்க முடியும், என டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
newstm.in