முதல்வரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..! ஏன் தெரியுமா..?
முதல்வரின் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..! ஏன் தெரியுமா..?
காவிரியில் மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் கருத்துக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் மேகதாது அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேகதாது அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டு கர்நாடக அரசுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைகளைப் பூர்த்தி செய்வது காவிரி ஆற்றின் நீர். இந்த காவிரிக்கு நடுவே கர்நாடக அரசு கட்ட முயலும் மேகதாது அணைக்கு எதிராக பல சட்டப் போராட்டங்களை முந்தைய அதிமுக அரசு நடத்தியுள்ளது.
மேலும், காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்ட எனது தலைமையிலான அரசு காவிரியில் மேகதாது அணை கட்டப்படுவதை நிறுத்தக்கோரி பிரதமரிடம் வலியுறுத்தியது, மேலும் இந்த விவகாரம் குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டு அது தற்போது நிலுவையில் உள்ளது.
இச்சூழ்நிலையில் கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் அணை கட்டப்படும் என அறிவித்திருப்பதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விவகாரத்தை கூர்மையாக கவனித்து காவிரியில் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை முழுமையாக பெற்று தமிழக நலன்காக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்