போராட்டத்தில் ஈடுபட்டால்.. ஊழியர்களுக்கு மின்துறை எச்சரிக்கை..!
போராட்டத்தில் ஈடுபட்டால்.. ஊழியர்களுக்கு மின்துறை எச்சரிக்கை..!
மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி அரசு மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“அனைத்து யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் துறைகளின் செயல்திறன் மற்றும் நுகர்வோர் சேவையை மேம்படுத்த மத்திய அரசு மின் துறைகளை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட வரைவு பரிமாற்ற திட்டத்தின்படி, தற்போது புதுவை அரசு மின்துறை ஊழியர்களால் பெறப்படுகிற சம்பளம், ஓய்வூதியம், வருடாந்திர சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் இதர ஓய்வுக்கால பலன்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது.
மின்துறை தனியார்மயமாக்கப்படும் பட்சத்தில் அனைத்து பொது மக்களுக்கும் உடனடி சேவையும், சிறந்த பராமரிப்பும் உறுதி செய்யப்படும். புதுச்சேரி மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.
மின்துறை ஊழியர்களை கொண்ட போராட்டக்குழு புதுச்சேரியில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக நாளை (பிப். 1ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. இதனால் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
புதுச்சேரி மின்துறையானது ஒரு பொது பயன்பாட்டு சேவை துறையாகும். மின்துறை ஊழியர்கள் அத்தியாவசியமான மின் வினியோக பணியை செய்கிறார்கள்.
எனவே மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது. மின்துறை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை எதிர்கொள்ள துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மின்வாரிய தலைமை அலுவலகம், அனைத்து துணை மின் நிலையங்கள் மற்றும் துறையின் பல்வேறு அலுவலகங்களில் 144-ன் கீழ் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவது சட்டவிரோதமாகும்.
மின்துறை ஊழியர்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. மின்ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பணி நடத்தை விதிகளின்படி போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாக கருதப்படும். வேலை நிறுத்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. எனவே அனைத்து ஊழியர்களும், தங்களது வேலைநிறுத்த அறிவிப்பை கைவிட்டு, வழக்கம் போல் தங்கள் பணிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.