நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி.. முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

Update: 2022-01-08 14:29 GMT

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.

இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நீட் விலக்கு கோரி வலியுறுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவு செப். 13-ம் தேதி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினோம். அதன்பின்னர், இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மாநில கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கவர்னர் வைத்துள்ளார். மாநில உரிமையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக் குறியானதால் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசரமாக, அவசியத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். நமது அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான்.

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். எனவே, வரைவுத் தீர்மானத்தின் மீது உங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்றும், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Similar News