கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்குக- பிரதமருக்கு ஈபிஎஸ் மீண்டும் கடிதம் !
கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்குக- பிரதமருக்கு ஈபிஎஸ் மீண்டும் கடிதம் !
தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனினும் இதனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசி கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. தடுப்பூசி விலை உயர்வு மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். மாநில அரசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தடுப்பூசி விலை நியாயமற்றது.
கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும். தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும். மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
newstm.in