மதுரை போஸ்டரால் பரபரப்பு..!! துரோகிகளிடம் இருந்து கட்சியை காப்பாற்றும் சின்னம்மா..!
மதுரை போஸ்டரால் பரபரப்பு..!! துரோகிகளிடம் இருந்து கட்சியை காப்பாற்றும் சின்னம்மா..!
மதுரை மாவட்டம் முழுவதும் சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக புறநகர் மாவட்ட கிழக்கு மகளிர் அணி துணைச் செயலாளர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவை வழிநடத்த சசிகலாவை வேண்டுகோள் விடுக்கும் வகையில் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால், யார் யாரிடமோ போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார். அவர் அதிமுகவில் உறுப்பினர் கூட கிடையாது. அதனால், 10 பேர் என்ன..? ஆயிரம் பேரிடம் அவர் பேசினாலும் கவலை இல்லை. அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட முன்னாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ‘ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் துயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன், மதுரை திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், அண்ணாநகர், செல்லூர் உட்பட மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதைத் தொடர்ந்து, இன்று அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.