சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூடுதல் 1 மணி நேரம்...
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூடுதல் 1 மணி நேரம்...
தமிழகத்தில் தேர்தல் நடத்தும் தேதியை தீர்மானிப்பது மற்றும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா மற்றும் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 2 நாட்கள் தங்கியிருந்து, தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில், பத்திரிகையாளர்களுக்கு சுனில் அரோரா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
இங்கு அரசியல் கட்சியினர், மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து ஆய்வு மேற்கொண்டோம். தமிழக சட்ட சபையின் காலம் வரும் மே 24-ந் தேதி முடிகிறது. எனவே இங்குள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அதற்கு முன்பு தேர்தல் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் எப்போதுமே அதிக அளவில் வாக்கு செலுத்தப்படுகிறது. இந்தத் தேர்தலிலும் அதை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.
சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தன்னை எப்போதுமே அர்ப்பணித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் கூடுதலாக, தூண்டுதல் இல்லாத தேர்தலை ஆணையம் நடத்த திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதே நேரத்தில் வாக்களிப்பில் மக்களின் பங்களிப்பை, குறிப்பாக புதிய வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஆகியோரின் பங்களிப்பை அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்துகிறோம்.
தமிழகத்தில் அதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. தொற்று இருந்தபோதே வாக்காளர்கள் அதிகமுள்ள பீகாரில் தேர்தலை நடத்தினோம். அங்கு நடத்திய தேர்தல் சவாலாக இருந்தது.
தமிழக அரசியல் கட்சியினரை சந்தித்து பேசியிருக்கிறோம். அவர்கள் பல கருத்துகளை தெரிவித்திருந்தனர். அனைவருமே ஒரே கட்ட தேர்தலை வலியுறுத்தினர். வாக்குப்பதிவு நடந்து ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் முடிவை வெளியிடும்படி கோரினர். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடத்தும்போது இது சாத்தியமில்லை.அதிக அளவில் மத்திய துணை ராணுவ படையினரை பாதுகாப்புப் பணியில் அமர்த்த வேண்டும், தேர்தல் பார்வையாளர்களை வெளி மாநிலங்களில் இருந்து நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பண பலம் அதிகமாக பிரயோகிக்கப்படுகிறது என்றும் இலவசங்கள் அள்ளித் தரப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
வயது முதிர்ந்தவர்கள், வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களிக்கும் முறையை சில கட்சிகள் ஆதரித்தன. சில கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்பின. சில கட்சியினர், தேர்தல் நேரத்தை நீட்டிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து உடனடியாக நாங்கள் கூடி ஆலோசனை நடத்தினோம்.
சமூக இடைவெளியுடன் தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பதிவு கால அளவை ஒரு மணிநேரம் நீட்டிக்க முடிவு செய்தோம். இதுபற்றி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹாவும் விரிவாக பேசி முடிவு செய்வார்கள். எப்போது நீட்டிப்பு செய்யப்படுகிறது என்பதுபற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னையில் உள்ளவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பு குறித்து ஒரு கட்சி சந்தேகங்களை எழுப்பியது. அந்தக் கூட்டம் முடிந்ததுமே, தேர்தல் ஆணைய அதிகாரி, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதை புகைப்படமாகவும், வீடியோ படமாகவும் பதிவு செய்துள்ளோம்.அதுபற்றிய அறிக்கையை கேட்டுப் பெற்றேன். எங்களிடம் சொல்லப்பட்டபடி அது பெரிய அல்லது சிறிய பிரச்சினையாகக் கூட இல்லை.மேல் தளங்கள் மிகச் சரியாகவே உள்ளன. கீழ் தளத்தில் ஒரு கதவு சரியாக இணைந்திருக்கவில்லை. இதுபோன்ற தகவல்களைப் பெற்றால் உடனடியாக சரி செய்கிறோம்.
வாக்குப்பதிவின் போது சமூக இடைவெளி நெறிமுறைகளை பின்பற்ற இருப்பதால், வாக்குச்சாவடி எண்ணிக்கை தொடர்பான விதியில் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் என்ற நடைமுறை ஆயிரம் வாக்காளர்கள் என்று மாற்றப்பட்டுள்ளது.இதன் மூலம் 25 ஆயிரம் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். எனவே தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 324 இருந்து 93 ஆயிரத்து 324-ஆக அதிகரிக்கவுள்ளது.
பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு சாதாரண தேர்தல் பார்வையாளர்களை முந்தைய தேர்தல்களில் அனுப்பி இருந்தோம். தற்போது குறைந்தபட்சம் சிறப்பு செலவீனப் பார்வையாளர்களை தமிழகத்திற்கு இந்தத் தேர்தலில் நியமிக்க முடிவு செய்துள்ளோம்.அரசியல் கட்சிகளின் புகார்களின் அடிப்படையில் வரும் தேர்தலின்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரை பிரித்தனுப்பும் பணிக்காக அதிகாரி ஒருவரை நியமிக்க இருக்கிறோம்.
அமலாக்க முகமைகளின், குறிப்பாக மாநில கலால்வரித் துறை, சிறப்பு அமலாக்கத் துறை ஆகியவற்றின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும்போது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதுபற்றிய விவரங்களை தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்களால் இன்னும் நிறைய செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம்.
இங்கு அவர்கள் மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றிய பொருட்களின் அளவை மதிப்பிட்டால், மிகக் குறைவாக உள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பாக 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், டிரைவர்கள், கூரியர் கொண்டு செல்பவர்கள் என சாதாரண ஊழியர்கள்தான் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். பெரிய ஆட்கள் யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம் இருந்து சிறப்பு அறிக்கையை கேட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.