போலி சான்றிதழ் வழக்கு.. பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம்..!
போலி சான்றிதழ் வழக்கு.. பாஜக எம்எல்ஏ தகுதி நீக்கம்..!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் இந்திர பிரதாப் திவாரி. இவர், 1990ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சகெட் டிகிரி கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது, 2-ம் ஆண்டு பட்டப்படிப்பில் தோல்வி அடைந்துள்ளார்.
இதையடுத்து, போலியான மதிப்பெண் சான்றிதழ் கொண்டு பட்டப்படிப்பில் 3-ம் ஆண்டு சேர்ந்துள்ளார். போலியான மதிப்பெண் சான்றிதழ் அளித்து கல்லூரி வகுப்பில் சேர்ந்ததாக இந்திர பிரதாப் மீது சகெட் டிகிரி கல்லூரி தலைமை ஆசிரியர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.இதற்கிடையில், இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அக்டோபர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போலி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி இந்திரபிரதாப் கல்லூரி வகுப்பில் சேர்ந்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து இந்திர பிரதாப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் சிறையில் உள்ள எம்.எல்.ஏ இந்திர பிரதாப் உத்தரபிரதேச சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திர பிரதாப்பை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்திர பிரதாப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள் காலியாக உள்ளன. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.