பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் சுட்டுக்கொலை..!
பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் சுட்டுக்கொலை..!
ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வை பதிவு செய்து புவிட்சர் விருது பெற்ற பிரபல இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், ஆப்கானிஸ்தான் காந்தகாரில் நடந்த கலவரத்தை படம் பிடித்தபோது தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வை புகைப்படங்களால் பதிவு செய்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பதிவு செய்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைப் பகுதி அருகே ஓடும் நதி நஃப். இதன் முகப்பு பகுதியில் ஷா போரிர் தீவுப் பகுதி அமைந்துள்ளது. அங்கு, படகில் வந்திறங்கிய பெண், கரையில் நிலை தடுமாறி விழுந்து எழுகிறது. மனதை சோகத்தில் நிறைக்கும் இந்தக் காட்சியை டேனிஷ் சித்திக் படம் பிடித்தார்.
ரோஹிங்கிய அகதிகள் தங்கள் கைகளில் மூட்டை முடிச்சுகளுடன் செல்கின்றனர். அவர்களின் பின்புறம் வானம் இருண்டு மேகக் கூட்டங்களுடன் காட்சியளிக்கிறது. இதனையும் சிறப்பாக படம்பிடித்துள்ளார் டேனிஷ் சித்திக்.
மியான்மரில், தங்கள் இருப்பிடங்கள் ராணுவத்தினர் சூறையாடி, தீயிடப்பட்ட பின் அகதிகளாக ரோஹிங்கிய மக்கள் வெளியேறினர். இவர்கள் வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக், டில்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றுள்ளார். இதையடுத்து மாஸ் கம்யூனிகேஷன் படித்து, தனது பத்திரிகையாளர் பணியை தொடங்கினார்.
கடந்த 2009ம் ஆண்டு புகைப்பட பத்திரிகையாளராக மாறிய இவர், 2010ல் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். மொசூல் நகரின் அழிவு, நேபாள நிலநடுக்கம் உள்ளிட்டவை குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் காந்தகாரில் நடந்த கலவரத்தை படம்பிடித்த போது, தலிபான் தீவிரவாதிகளால் டேனிஷ் சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டார்.