நடிகர் விவேக் வீட்டில் குவிந்த ரசிகர்கள், மக்கள்.. நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி !!
நடிகர் விவேக் வீட்டில் குவிந்த ரசிகர்கள், மக்கள்.. நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி !!
நடிகர் விவேக் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கிற்கு உடல்நலம் மோசமானதை அடுத்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அவர் இன்று அதிகாலை 4.35 மணிக்கு காலமானார். இதனால் உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நடிகர் விவேக் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் வசிக்கும் பகுதியில் மக்களிடம் நன்கு நெருங்கி பழகக்கூடியவர். இயல்பாக பேசக்கூடியவர். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருமே விவேக் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். தற்போது விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்துமாறு கூறினார்கள்.
இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தபடியும், முக கவசம் அணிந்தபடியும் அவர் வசித்த தெருவில் நீண்ட வரிசையில் உள்ளனர்.
ஒருவர் பின் ஒருவராக சென்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல் விவேக்கின் ரசிகர்களும் இன்று காலையிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். அவர்களும் வரிசையில் காத்திருந்து விவேக் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதில் ஏராளமானோர் மரக்கன்றுகளுடன் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
newstm.in