படப்பிடிப்பு தளத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஃபகத் பாசில்- ரசிகர்கள் பிரார்த்தனை..!
படப்பிடிப்பு தளத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஃபகத் பாசில்- ரசிகர்கள் பிரார்த்தனை..!
திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், மாடியில் இருந்து கீழே விழுந்த நடிகர் நடிகர் ஃபகத் பாசில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகை நஸ்ரியாவின் கணவரும், மலையாள சினிமாவின் முன்னணி நடிகராகவும் இருப்பவர் ஃபகத் பாசில். எம்.ராஜா இயக்கத்தில் வெளியான ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். அதை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
பிறகு கமல் நடிப்பில் உருவாகவுள்ள ’விக்ரம்’ படத்திலும் ஃபகத்தை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது முடியாமல் போனது. இறுதியில் அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தொடர்ந்து மலையாளப் படங்களில் அவர் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’மாலிக்’ படம் அடுத்தாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக தமிழ் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும் இருள், தனக்கம், ஜோஜி, மலயன் குஞ்சு, பட்டு, பாச்சாவும் அல்புத விளக்கும் ஆகிய படங்கள் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் கொச்சியிலுள்ள படப்பிடிப்பு தளத்தில் ஃபகத் பாசில் நடித்து வரும் ’மலயன் குஞ்சு’ படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் போடப்பட்ட மாடி செட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தது. இதில் மேலே இருந்த நடிகர் ஃபகத்தும் கீழே விழுந்தார்.
இதனால் அவருடைய மூக்கு அடிப்பட்டது. பெரியளவில் காயம் இல்லை என்றாலும் நிறைய ரத்தம் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் படக்குழுவினர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.