கார் ஷோரூம் ஊழியர்களை அலறவிட்ட விவசாயி!!
கார் ஷோரூம் ஊழியர்களை அலறவிட்ட விவசாயி!!
சரக்கு வாகனம் வாங்க கார் ஷோரூம் சென்ற விவசாயியை ஊழியர்கள் ஏளனமாக பேசியதை அடுத்து, அவர் ஊழியர்களை அலறவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கெம்பேகவுடா, கார் ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அழுக்கான உடை அணிந்து சென்றதாக தெரிகிறது.
அவர் ஊழியர்களிடம் விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வேனை வாங்க வந்ததாக கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள் உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
அதற்கு கெம்பேகவுடா, தாம் நிஜமாகவே சரக்கு வேன் வாங்கவே வந்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்போது ஷோரூம் ஊழியர்கள் அரை மணி நேரத்தில் ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு சரக்கு வேனை வாங்கி செல்லுங்கள் என்று கூறி சவால் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கெம்பேகவுடா, கிராமத்தில் வசித்து வரும் தனது மாமாவான ராம ஆஞ்சநேயாவை தொடர்புகொண்டு உடனடியாக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி ராமஆஞ்சநேயாவும் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு சென்றார். பின்னர் அந்த பணத்தை ஷோரூம் ஊழியர்களிடம் கெம்பேகவுடா கொடுத்தார். இதனால் ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நீங்கள் கூறியபடி அரை மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன், எனக்கு சரக்கு வேனை டெலிவரி செய்யுங்கள் என்று கேட்டு உள்ளார். அப்போது ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சரக்கு வேனை 2 நாட்களில் டெலிவரி செய்வதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த கெம்பேகவுடா, ஷோரூம் முன்பு போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் அங்கு சென்று கெம்பேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அலட்சியமாக பேசிய ஷோரூம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெம்பேகவுடா வலியுறுத்தினார்.
தங்களது தவறை உணர்ந்த ஷோரூம் ஊழியர்கள், கெம்பேகவுடாவிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத்தொடர்ந்து, விவசாயி கெம்பேகவுடா இந்த ஷோரூமில் தான் கார் வாங்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
newstm.in