நாளை மறுநாள் உண்ணாவிரதம்.. ஜன.1-ம் தேதி ரயில் மறியல்.. மீனவர்கள் எச்சரிக்கை..!

நாளை மறுநாள் உண்ணாவிரதம்.. ஜன.1-ம் தேதி ரயில் மறியல்.. மீனவர்கள் எச்சரிக்கை..!

Update: 2021-12-20 14:21 GMT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த 18-ம் தேதி  ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களை சிறைபிடித்துச் சென்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சில மணி நேரங்களே ஆன நிலையில் மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 55 மீனவர்களையும் விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இதற்கிடையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55  மீனவர்களை விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை வரும் 31-ம் தேதிக்குள் விடுவிக்காத பட்சத்தில், ஜனவரி 1-ம் தேதி ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலை தங்கச்சிமடம் பகுதியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Similar News