மதுரையில் பெண் சிசு கொலையா? - தலைமறைவான பெற்றோரை தேடும் காவல்துறை !

மதுரையில் பெண் சிசு கொலையா? - தலைமறைவான பெற்றோரை தேடும் காவல்துறை !

Update: 2021-12-28 17:06 GMT

பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள பெரிய கட்டளை கிராமத்தில் முத்துப்பாண்டி- கவுசல்யா தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 21ஆம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. சேடப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி அந்த குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து தம்பதியர் உறவினர்கள் யாருக்கும் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வீட்டின் அருகிலேயே பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை புதைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த சிசுவின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவதாக பிறந்துள்ள பெண் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்துவதற்காக கிராமத்துக்கு காவல்துறையினர் சென்றனர். ஆனால் சிசுவின் பெற்றோர் முத்துப்பாண்டி மற்றும் கவுசல்யா ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
சிசு உயிரிழந்துள்ள நிலையில் பெற்றோர் தலைமறைவாகியிருப்பது காவல்துறையினருக்கு அதிக அளவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிசு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

புதைக்கப்பட்ட இடத்தில் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்பிறகு முழு தகவல் தெரியவரும் எனவும் கூறுகின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள பெற்றோரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.  


newstm.in

Similar News