மீனவர்கள் கொலை.. இலங்கை கடற்படையினரை கைது செய்ய கோரி வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு !
மீனவர்கள் கொலை.. இலங்கை கடற்படையினரை கைது செய்ய கோரி வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு !
நடு கடலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை எழுப்பினர். நாடாளுமன்றத்திலும் தமிழக எம்பிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்வது, கொலை செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கி முனையில் தமிழக மீனவர்களை கடத்துவது, சட்டவிரோதமாக சிறையில் அடைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 1,500 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் மனித உரிமை ஆணையத்தின் முதல் கோட்பாடு மனித உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே. ஆனால் UNO மனித உரிமை ஆணையம் இது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் தற்போதுவரை எட்டப்படவில்லை.
2013 மே 3ஆம் தேதி தமிழக அரசு இந்திய மீனவர்களை காப்பாற்றுவதற்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் தற்போது வரை இலங்கை சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. தமிழக மீனவர்கள் குறித்து மத்திய அரசு எந்த ஒரு கவனமும் கொள்ளவில்லை.
சமீபத்தில் கேரள எல்லைக்குள் இத்தாலி கப்பல் நுழைந்து கேரளா மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக இந்திய அரசு இரண்டு இத்தாலிய மாலுமிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தமிழக மீனவர்கள் 1500 பேரை, இலங்கை கப்பல் படையினர் கொலை செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை. இந்திய அரசு இலங்கையை நட்பு நாடாக கருதுகிறது.
இந்திய அரசு வலிமையான முடிவு எடுக்காததால் இலங்கை அரசு மனித உரிமை மீறலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பின்பு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவர்களை மட்டும் விடுதலை செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
சமீபத்தில் 2021 ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக வாடகை படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற மெசியா, நாகராஜ், செந்தில் குமரன், சாம்சந்தவின் ஆகிய 4 நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்தி கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு இலங்கை அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொலை செய்த இலங்கை கடற்படையை சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுவரை மேற்கொள்ளவில்லை.
எனவே 2021 ஜனவரி 18ஆம் தேதி 4 இந்திய மீனவர்களை கொலை செய்த இலங்கை கப்பல் படையை சேர்ந்த நபர்களை கைது செய்யவும், இறந்த இந்திய மீனவர்கள் 4 குடும்பத்தினருக்கும் இலங்கை அரசு நிவாரணம் வழங்கவும், இந்திய மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காப்பாற்றுவதற்கு முறையான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
newstm.in