நெகிழ்ச்சி! டாக்டருக்கு ஊரே திரண்டு இறுதி சடங்கு செய்தது! பாசம் காட்டிய வடசென்னை மக்கள்!
நெகிழ்ச்சி! டாக்டருக்கு ஊரே திரண்டு இறுதி சடங்கு செய்தது! பாசம் காட்டிய வடசென்னை மக்கள்!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் கோபாலன் உயிரிழந்ததை அடுத்து வடசென்னை மக்களே அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வந்த டாக்டர் கோபாலன் 10 ரூபாய்க்கு மருத்துவ சேவையாற்றி வந்தார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வடசென்னையே கண்ணீரில் மூழ்கியது. அவர் தனது 77 வயதில் காலமானார்.
மன்னார்குடியை சேர்ந்த இவர் 1966ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.எஸ். முடித்த பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.
2002இல் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் 1969 முதல் வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை வைத்து, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
1976ஆம் ஆண்டு முதல் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் மக்களாகவே சில்லரை தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்தனர்.
மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்த டாக்டர் கோபாலன், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவுக்கு வண்ணாரப்பேட்டை மக்களே இறுதிச் சடங்குகளை செய்தனர். அவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க மருத்துவர் கோபாலனுக்கு இறுதி மரியாதையை செலுத்தினர்.
டாக்டர் கோபாலன் மறைவு அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
newstm.in