பேராசையால் ரூ.6 கோடி பணத்தை இழந்த முன்னாள் அமைச்சரின் மருமகன்!!
பேராசையால் ரூ.6 கோடி பணத்தை இழந்த முன்னாள் அமைச்சரின் மருமகன்!!
பேராசை காரணமாக புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மருமகன் ரூ.6.5 கோடி பணத்தை இழந்துள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சரான பன்னீர்செல்வத்தின் மருமகனான பிரவீன் அலெக்சாண்டர் (31) பில்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 4ஆம் தேதி மாலை பெரியமேடு காவல் நிலையத்தில் பிரவீன் அலெக்ஸாண்டர் மற்றும் அவரது நண்பர்களான ஆவின் பாலக டீலரான கௌதம்(29), முந்திரி, பாதாம், பிஸ்தா மொத்த வியாபார டீலரான கணேச குமார் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி தங்களிடம் சென்னையை சேர்ந்த நான்கு நபர்கள் ரூ.6.5 கோடி பணம் வாங்கி மோசடி செய்ததாகவும், பாலாஜி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அவரது தந்தை துளசிதாஸ்(59) அவர்களுக்கு உடந்தையாக மகேஷ்(45), ஜெயகிருஷ்ணன் (43) ஆகிய நான்கு நபர்கள் மீது புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து நால்வரையும் பெரியமேடு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவரான பாலாஜி(34) தங்கம், வெள்ளி, கார், செல்போன் ஆகியவற்றை பில் இல்லாமல் வாங்கி விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருகிறார் என தெரியவந்தது.
பாலாஜியின் தந்தை துளசிதாஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு சாஸ்திரி பவனில் சுங்கத்துறை அதிகாரிகளிடம் நன்கு பழக்கம் இருப்பதாகவும் நாடகத்தை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.
இதனடிப்படையில் முதலில் பிரவீன் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் ரூபாய் 6 லட்சம் பணம் கொடுத்து அதற்கான தங்கத்தை பாலாஜியிடமிருந்து பெற்றுள்ளனர்.
பின்னர் பாலாஜி அவரது தந்தை துளசிதாஸ் மற்றும் மோசடி கூட்டாளிகளான மகேஷ், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் தங்களிடம் பல கோடி மதிப்பிலான தங்கம் சிக்கி உள்ளதாகவும் ரூபாய் 6.5 கோடி கொடுத்தால் மொத்த தங்கத்தையும் தந்து விடுவதாகவும் பிரவீண் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்களிடத்தில் கூறியுள்ளனர்.
பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகிய நிலையில் தங்கத்தையும் கொடுக்காமல் பணத்தையும் திரும்ப தராமல் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் ஏமாற்றி வந்துள்ளனர்.இதனையடுத்து புகாரின் பேரில் பாலாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்த அவரது தந்தை துளசிதாஸ் இவர்களது நண்பர்களான மகேஷ் மற்றும் ஜெயகிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.
newstm.in