செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நள்ளிரவு அரசுப் பேருந்து (SETC)கடக்கும் போது சுங்கச்சாவடி ஊழியர் சுங்கக் கட்டணம் கேட்ட விவகாரம் முற்றியதால், பயணிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். இந்நிலையில் மார்ச் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

                                    

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்து, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால், ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஓட்டுனர் சுங்கச்சாவடியின் குறுக்கே அரசுப் பேருந்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பேருந்துகள் செல்ல முடியாமல் 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டன.நெரிசலில் நின்றிருந்த பேருந்துகளில் இருந்து இறங்கிய பயணிகள், அனைவரும் டோல்கேட் பூத்துகள், சிசிடிவி, ஊழியர்களின் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நெறுக்கி சூறையாடியனர். இதனையடுத்து தகவல் அறிந்து போலீசார் கலவரம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர். சுங்கச்சாவடியை சீரமைக்காததால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் எந்தவித கட்டணமும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

                                    

                                     

இதனிடையே சுங்கசாவடியில் அடித்து நொறுக்கப்பட்ட கண்ணாடிகள், CCTV கேமராக்கள், மின் விளக்குகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, வரும் மார்ச் 1ம் தேதி முதல் சுங்கசாவடி கட்டணம் வசூலிக்கபடும் என்று  விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற பிரச்னைகளை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags: